முதல் டெஸ்ட்; டி சில்வா - கமிந்து மெண்டிஸ் சதம் - வங்காளதேசத்திற்கு 511 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை


முதல் டெஸ்ட்; டி சில்வா - கமிந்து மெண்டிஸ் சதம் - வங்காளதேசத்திற்கு 511 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
x

Image Courtesy: AFP

இலங்கை அணி தரப்பில் சிறப்பாக ஆடிய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

சில்ஹெட்,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கையும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசமும் கைப்பற்றின.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 280 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தனஞ்சயா டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்தினர். வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கலீத் அகமது மற்றும் நஹித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம், இலங்கை அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 188 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 47 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் விஷ்வா பெர்னண்டோ 4 விக்கெட்டுகளும், கசூன் ரஜிதா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து 92 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் இலங்கை அணி 211 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இலங்கை அணி 110.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 418 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் சிறப்பாக ஆடிய கமிந்து மெண்டிஸ் 164 ரன்னும், டி சில்வா 108 ரன்னும் எடுத்தனர்.

வங்காளதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.


Next Story