முதல் அரையிறுதி போட்டி: பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கு


தினத்தந்தி 9 Nov 2022 3:16 PM IST (Updated: 9 Nov 2022 3:21 PM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப் 1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து (7 புள்ளி), இங்கிலாந்து (7 புள்ளி), குரூப் 2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா (8 புள்ளி), பாகிஸ்தான் (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. குரூப்1ல் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகள் பெற்ற போதிலும் ரன்ரேட்டில் பின்தங்கியதால் வெளியேற நேரிட்டது.

இந்த சூழலில் சிட்னியில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதன்படி நியூசிலாந்து அணியின் சார்பில் பின் ஆலென் மற்றும் டிவான் கான்வே ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பின் ஆலென் 4 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து டிவான் கான்வேவும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். பாகிஸ்தான் அணியின் சிறப்பான பீல்டிங் காரணமாக தொடர்ந்து ரன்கள் சேர்க்க நியூசிலாந்து அணியினர் போராடினர்.

அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சுடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் கேன் வில்லியம்சன் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் 42 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து போல்ட் ஆகி வெளியேறினார்.

மற்றொரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் 32 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

முடிவில் டேரில் மிட்செல் 53 (35) ரன்களும், ஜேம்ஸ் நீஷம் 16 (12) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளும், முகமது நவாஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story