முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு 256 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து - நசீம் ஷா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்..!


முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு 256 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து - நசீம் ஷா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்..!
x

Image Courtesy: AFP 

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று கராச்சியில் நடைபெற்று வருகிறது.

கராச்சி,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடர் 0-0 என டிராவில் முடிந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று கராச்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக் அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்தின் கான்வே மற்றும் பின் ஆலென் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய நசீம் ஷா முதல் ஓவரிலேயே டேவான் கான்வேயின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். அதிரடியாக ஆடி வந்த பின் ஆலென் 29 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து வில்லியம்சனுடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசு எதிரணியை திணறடித்தனர். ரன் வந்தாலும் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. அந்த அணியில் வில்லியம்சன் 26 ரன், டேரில் மிட்செல் 36 ரன், சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய டாம் லதாம் 42 ரன்னிலும் அவுட் ஆகினர்.

அந்த அணி 147 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த க்லென் பிலிப்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஜோடி பொறுமையாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப்ஸ் 37 ரன்னிலும், பிரேஸ்வெல் 43 ரன்னிலும், அடுத்து வந்த ஹென்றி சிப்லே 0 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆட உள்ளது.


Next Story