கடைசி டி20 கிரிக்கெட்: மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தம்


கடைசி டி20 கிரிக்கெட்: மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தம்
x

Image Courtacy: BCCITwitter

தினத்தந்தி 13 Aug 2023 6:31 PM GMT (Updated: 14 Aug 2023 11:28 AM GMT)

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 5-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

லாடெர்ஹில்,

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது . டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கும் , கில் 9 ரன்களுக்கும் எடுத்து அகேல் ஹூசைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் , திலக் வர்மா ஆகியோர் இணைந்து சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடியில் 27 ரன்கள் எடுத்த நிலையில் திலக் வர்மா, ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து சஞ்சு சாம்சன் 13 ரன்களும் , ஹர்திக் பாண்டியா 14 ரன்களும் எடுத்து ரோமெரோ ஷெப்பர்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். அவர் அரைசதம் அடித்த பின்னர் 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷெப்பர்டு 4 விக்கெட்டுகளும், அகேல் ஹூசைன் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் ரோஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் பிராண்டன் கிங் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் மேயர்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கிங்குடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடியில் பிராண்டன் கிங் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அப்போது தீடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 12.3 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற இன்னும் 45 பந்துகளில் 49 ரன்கள் எடுக்க வேண்டி உள்ளது. மோசமான வானிலை காரணமாக போட்டி தொடங்கிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Next Story