பின் ஆலன் அதிரடி சதம்... சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சான் பிரான்சிஸ்கோ
குவாலிபயர் 2 ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்சை வீழ்த்தி சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
டல்லாஸ்,
மேஜர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற குவாலிபயர் 2 ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர்கிங்ஸ் - சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், தொடக்க ஆட்டக்காரர் ஆன பின் ஆலனின் அதிரடி சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பின் ஆலன் 101 ரன்கள் அடிக்க, டெக்சாஸ் தரப்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டெக்சாஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பாப் டு பிளெஸ்சிஸ் - கான்வே இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. சான் பிரான்சிஸ்கோ பந்துவீச்சை சிதறடித்த டு பிளெஸ்சிஸ் 22 பந்துகளில் 45 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஆரோன் ஹார்டி 19 ரன்களிலும், மிலிண்ட் குமார் 2 ரன்களிலும், ஸ்டோய்னிஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய ஜோஷ்வா டிரொம்ப், கான்வேவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இருப்பினும் இலக்கை நெருங்க முடிந்ததே தவிர கடக்க முடியவில்லை.
முடிவில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக கான்வே 62 ரன்களும், ஜோஷ்வா டிரொம்ப் 56 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதிப்போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.