இங்கிலாந்து-நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்; வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது
வெற்றியை தீர்மானிக்கும் 4-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று நடக்கிறது.
லண்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
'டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து 48.1 ஓவர்களில் 368 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 182 ரன்னும், டேவிட் மலான் 96 ரன்னும் சேர்த்தனர்.
182 ரன்கள் குவித்ததன் மூலம் பென் ஸ்டோக்ஸ், ஜாசன் ராயை (2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 180 ரன்) பின்னுக்கு தள்ளி ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை தனதாக்கினார். நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டும், பென் லிஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. 39 ஓவர்களில் அந்த அணி 187 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மீண்டும் வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தொடரை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.