இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடர்: கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
லண்டன்,
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 283 ரன்களும், ஆஸ்திரேலியா 295 ரன்களும் எடுத்தன. 12 பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 389 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 81.5 ஓவர்களில் 395 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தனது கடைசி டெஸ்டில் ஆடும் ஸ்டூவர்ட் பிராட் 8 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜாவும், டேவிட் வார்னரும் வலுவான தொடக்கம் உருவாக்கினர். இங்கிலாந்தின் பவுன்சர் யுக்தியை தகர்த்து ரன்களாக மாற்றிய இருவரும் அரைசதம் கடந்தனர்.
ஆஸ்திரேலியா 38 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை கொட்டியதால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கவாஜா 69 ரன்களுடனும் (130 பந்து, 8 பவுண்டரி), வார்னர் 58 ரன்னுடனும் (99 பந்து, 9 பவுண்டரி) களத்தில் நிற்கிறார்கள். வெற்றிக்கு மேற்கொண்டு 249 ரன்கள் தேவைப்படும் நிலையில் இன்னும் ஒரு நாள் எஞ்சியிருப்பதால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வாகை சூடினால் தொடரை 3-1 என்ற கணக்கில் சொந்தமாக்கும். இங்கிலாந்து வென்றால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.