இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 295 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
லண்டன்,
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. அதிரடியாக முதலில் பேட் செய்த இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா (26 ரன்), மார்னஸ் லபுஸ்சேன் (2 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. இதனால் ஸ்கோர் ஒரேயடியாக மந்தமானது. லபுஸ்சேன் 9 ரன்னில் (82 பந்து) ஸ்லிப்பில் ஜோ ரூட்டிடம் பிடிபட்டார். அடுத்து களம் புகுந்த ஸ்டீவன் சுமித் நிலைத்து நின்று விளையாட, இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் காலியானது. கவாஜா 47 ரன்னிலும் (157 பந்து, 7 பவுண்டரி), டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 16 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 10 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 7 ரன்னிலும் வெளியேறினர். அரைசதத்தை கடந்து போராடிய ஸ்டீவன் சுமித் 71 ரன்களில் (123 பந்து, 6 பவுண்டரி) விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் சிக்கினார்.
இதைத் தொடர்ந்து 9-வது விக்கெட்டுக்கு கேப்டன் கம்மின்சும், டாட் மர்பியும் ஜோடி சேர்ந்து தடாலடியாக மட்டையை சுழற்றினர். குறிப்பாக மார்க் வுட்டின் ஓவர்களில் மர்பி 3 சிக்சர்கள் விரட்டி ஆச்சரியப்படுத்தினார். ஸ்கோர் 288-ஐ எட்டிய போது மர்பி 34 ரன்களில் (39 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். கம்மின்ஸ் 36 ரன்களில் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார்.
முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 103.1 ஓவர்களில் 295 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, மொத்தம் 12 ரன்கள் முன்னிலை பெற்றது. அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட், மார்க் வுட், ஜோரூட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையும் சேர்த்து பிராட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 151 விக்கெட் சாய்த்து உள்ளார். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 5-வது பவுலர் என்ற பெருமையை பிராட் பெற்றார். சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 2-வது நாளில் பந்து வீச முடியவில்லை. இது இங்கிலாந்துக்கு சற்று பின்னடைவாக அமைந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.