பெண்கள் பிரீமியர் லீக்; எல்லிஸ் பெர்ரி அடித்த பந்து மோதி நொறுங்கிய கார் கண்ணாடி - வீடியோ


பெண்கள் பிரீமியர் லீக்; எல்லிஸ் பெர்ரி அடித்த பந்து மோதி நொறுங்கிய கார் கண்ணாடி - வீடியோ
x

Image Grab on Video Posted by @JioCinema

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.

பெங்களூரு,

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அதிரடியாக விளையாடியது. வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய மந்தனா 80 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் எல்லிஸ் பெர்ரியும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மந்தனா 80 ரன்களும், பெர்ரி 58 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலி மற்றும் கிரண் நவ்கிரே ஆகியோர் களம் இறங்கினர். இதில் கிரண் நவ்கிரே 18 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய சமாரி அத்தபட்டு 8 ரன், கிரேஸ் ஹாரிஸ் 5 ரன், ஸ்வேதா செஹ்ராவத் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அலிசா ஹீலி அரைசதம் அடித்த நிலையில் 55 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து தீப்தி சர்மா மற்றும் பூனம் கெம்னார் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதில் தீப்தி சர்மா 33 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய எக்லஸ்டோன் 4 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 23 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்ந்லையில் இந்த ஆட்டத்தில் பெங்களூரு பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆட்டத்தின் 19வது ஓவரை தீப்தி சர்மா வீசினார்.

அந்த ஓவரின் 5வது பந்தை சந்தித்த எல்லிஸ் பெர்ரி அதை சிக்சருக்கு விரட்டினார். அந்த பந்து எல்லைக்கோட்டை தாண்டி சென்று நேராக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியின் மீது விழுந்தது. பந்து வந்து தாக்கியதில் கார் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



Next Story