வெளியேற்றுதல் சுற்று: ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
பெங்களூரு அணி கடைசியாக நடைபெற்ற 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது.
ஆமதாபாத்,
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், 4-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 17 புள்ளிகள் பெற்று 6-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று கம்பீரமாக காட்சியளித்த அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் வரிசையாக 4-ல் தோற்றதால் சறுக்கலை சந்தித்தது. அந்த அணியின் முந்தைய லீக் ஆட்டம் (கொல்கத்தாவுக்கு எதிராக) மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
முன்னாள் (2008) சாம்பியனான ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ரியான் பராக் (4 அரைசதம் உள்பட 531 ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (5 அரைசதம் உள்பட 504), ஜெய்ஸ்வால் (ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 348) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஜோஸ் பட்லர் இங்கிலாந்து திரும்பி விட்டதால் ஏற்பட்டு இருக்கும் இழப்பை சரிக்கட்டும் வகையில் டாம் கோலர் காட்மோர் விளையாட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா, அஸ்வின் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.
பெங்களூரு அணி 14 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 7 தோல்வியுடன் 14 புள்ளியுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட்டில் சென்னை, டெல்லி, லக்னோ ஆகிய அணிகளை பின்னுக்கு தள்ளி விட்டு 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
இதுவரை கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி தனது முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியின் கதை முடிந்தது என்று எல்லோரும் நினைத்த போது, அந்த அணி கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டது. அதுவும் முந்தைய திரில்லிங்கான ஆட்டத்தில் 27 ரன் வித்தியாசத்தில் சென்னையை வெளியேற்றி சிலிர்க்க வைத்தது.
பெங்களூரு அணியில் விராட்கோலி 708 ரன்கள் (ஒரு சதம், 5 அரைசதம்) குவித்து நடப்பு தொடரில் அதிக ரன் வீரருக்குரிய ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசப்படுத்தி இருப்பதுடன் அபார பார்மில் இருக்கிறார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (4 அரைசதம் உள்பட 421), ரஜத் படிதார் (5 அரைசதம் உள்பட 361), தினேஷ் கார்த்திக், கேமரூன் கிரீன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், லோக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
பெங்களூருவுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்த ராஜஸ்தான் அணிக்கு இந்த முறை நிச்சயம் கடும் சவால் காத்திருக்கிறது என்றே சொல்லலாம். என்றாலும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 15 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 13 ஆட்டங்களிலும் வென்று இருக்கின்றன. இரண்டு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோலர் காட்மோர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், அஸ்வின், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்,
பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், ஸ்வப்னில் சிங் அல்லது கரண் ஷர்மா, லோக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது சிராஜ்.