கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள்..அவரை இறக்குங்கள் - இந்தியாவுக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்
கடந்த ஐசிசி தொடர்களில் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன்கள் கூட இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதை மைக்கேல் வாகன் சுட்டிக் காட்டியுள்ளார்.
லண்டன்,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் 20ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது.
முன்னதாக இந்தியா தங்களுடைய லீக் சுற்று முழுவதையும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சுகளை கொண்ட அமெரிக்காவில் விளையாடியது. ஆனால் இந்தியாவின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. அதனால் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தங்களுடைய பேட்டிங் வரிசையில் ஜெய்ஸ்வாலை ஓப்பனிங்கில் களமிறக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். கடந்த ஐசிசி தொடர்களில் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன்கள் கூட இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே அதே தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கும் அவர் ரிஷப் பண்ட்டை 5-வது விளையாட வைத்து ஷிவம் துபேவை பெஞ்சில் அமர வைக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜெய்ஸ்வால் ஓப்பனிங்கில் பேட்டிங் செய்வதை நான் பார்க்க விரும்புகிறேன். அதற்காக 3-வது இடத்தில் விராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆகிய எந்த வலது கை பேட்ஸ்மேன் களமிறங்கினாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன். ஷிவம் துபே ஐந்தாவது இடத்தில் விளையாடுகிறார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் அங்கே நான் ரிஷப் பண்ட்டை பார்க்க விரும்புகிறேன். ஜெய்ஸ்வால் அற்புதமான வீரர். எனவே நல்ல பேட்ஸ்மேனான அவர் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகிறேன். உண்மையில் இந்திய டாப் ஆடரில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை. அந்தத் தவறை கடந்த காலங்களில் இந்தியா செய்தனர். எனவே இம்முறை ஜெய்ஸ்வால் என்னுடைய இந்திய அணியில் இருக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.