ரஞ்சி போட்டியை விரும்புவதில்லை: இளம் வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் - மனோஜ் திவாரி


ரஞ்சி போட்டியை விரும்புவதில்லை: இளம் வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் -  மனோஜ் திவாரி
x

image courtesy;AFP

இளம் வீரர்கள் ரஞ்சி கிரிக்கெட்டை விட ஐ.பி.எல்.-ல் ஆடினாலே போதும் என்ற மனநிலையில் இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

இந்திய அணியின் முன்னாள் வீரரும், ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணியின் கேப்டனுமான மனோஜ் திவாரி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவர் 12 சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடி ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 287 ரன்களும், மூன்று 20 ஓவர் போட்டியில் 15 ரன்னும் எடுத்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட 38 வயதான மனோஜ் திவாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

2011-ம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த பிறகு (சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் 104 ரன்) என்னை ஏன் தொடர்ந்து புறக்கணித்தீர்கள் என்று அப்போது கேப்டனாக இருந்த டோனியிடம் கேட்க விரும்புகிறேன். ரோகித் சர்மா போல், விராட் கோலியை போன்று பெரிய ஹீரோவாக ஜொலிக்கும் அளவுக்கு என்னிடம் திறமை இருந்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை. தற்போது நிறைய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதை டி.வி.யில் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

இளம் வீரர்கள் பலர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடினாலே போதும் என்ற மனநிலையில் உள்ளனர். ஐ.பி.எல் போட்டியில் ஆடாத போது, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கிறார்களே தவிர உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்த போக்கு கவுரவமிக்க ரஞ்சி போட்டியின் முக்கியத்துவத்தை குறைக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறந்து விளங்குபவர்கள் ரஞ்சி போட்டிக்கு போதுமான முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) உணர வேண்டும். இதை பற்றி நான் முன்பே பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தற்போது இருக்கும் பி.சி.சி.ஐ விளையாட்டு நிபுணர்களால் நிர்வகிக்கப்படவில்லை, அரசியல்வாதிகளால் நடத்தப்படுகிறது. நானும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் தான்.

ஆனால் முதலில் நான் ஒரு விளையாட்டு வீரர். நான் எந்த கருத்தை தெரிவித்தாலும் எனக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ரஞ்சி தொடர்பாக வெளியிட்ட ஒரு பதிவுக்கு எனது போட்டி கட்டணத்தில் 20 சதவீதத்தை அபராதமாக இழந்தேன். நான் யாருடனும் சண்டைக்கு செல்ல விரும்பவில்லை. முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி போட்டிகளுக்கு கிரிக்கெட் வாரியம் உரிய முக்கியத்துவம் கொடுத்தாலே போதும்.

ஆஸ்திரேலியாவை விட இந்தியாவில் அதிக திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் பல உலகக் கோப்பை போட்டிகளில் தோற்பது வேதனையாக உள்ளது. நமது முழு கவனமும் ஐ.சி.சி. தொடர்களில் இருக்க வேண்டும். ரஞ்சி போட்டியின் மூலம் வீரர்களை அதற்கு தயார்படுத்த வேண்டும். இவ்வாறு மனோஜ் திவாரி கூறினார்.

மனோஜ் திவாரி தற்போது மேற்கு வங்காள மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story