கணிக்க முடியாத பகுதிகளுக்கு பந்தை விரட்டினார் தினேஷ் கார்த்திக்- கேஷவ் மகராஜ்


கணிக்க முடியாத பகுதிகளுக்கு பந்தை விரட்டினார் தினேஷ் கார்த்திக்- கேஷவ் மகராஜ்
x

20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் ஆட்டத்தை கச்சிதமாக முடிக்கும் வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர் என்று தென்ஆப்பிரிக்க வீரர் கேஷவ் மகராஜ் பாராட்டினார்.

ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இந்திய அணி சவாலான ஸ்கோரை எட்ட வழிவகுத்த தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 55 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை பெற்றார். 2006-ம் ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன தினேஷ் கார்த்திக் இப்போது தான் முதல்முறையாக 50 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக வயதில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனைக்கும் 37 வயதான தினேஷ் கார்த்திக் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு இந்தியாவின் டோனி 36 வயதில் அரைசதம் அடித்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

போட்டி முடிந்ததும் அவருக்கு புகழாரம் சூட்டிய தென்ஆப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டன் கேஷவ் மகராஜ் கூறுகையில், 'சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ள தினேஷ் கார்த்திக் அணியில் தனக்குரிய பணியை அருமையாக நிறைவு செய்கிறார். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் ஆட்டத்தை கச்சிதமாக முடிக்கும் வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். யூகிக்க முடியாத அளவுக்கு பந்துகளை மைதானத்தில் வெவ்வேறு பகுதிகளுக்கு விரட்டினார். இதனால் பந்துவீச்சில் அவரை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டிலேயே அவர் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். இன்றும் பேட்டிங்கில் பிரமாதப்படுத்தி விட்டார்' என்றார்.

தினேஷ் கார்த்திக் கூறுகையில், 'கடந்த ஆட்டத்தில் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. இந்த ஆட்டத்தில் எல்லாம் சிறப்பாக அமைந்தது. சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி என்னால் விளையாட முடியும். அதற்கு ஏற்ப பயிற்சியும் மேற்கொள்கிறேன். எல்லா பெருமையும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையே சாரும். ஓய்வறையை அவர் மிகவும் அமைதியாக வைத்திருக்கிறார். தெளிவு மற்றும் ஓய்வறை சூழல் சாதிக்க உதவுகிறது. அணியில் எனக்குரிய இடம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன்.

கடைசி போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. பெங்களூரு எனக்கு சொந்த மைதானம் போன்றதாகும். ஏனெனில் இங்கு நிறைய ஆட்டங்களில் விளையாடி உள்ளேன். இது எனக்கு பழக்கப்பட்ட ஆடுகளம் தான். அங்கு என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். இரு நாட்டு தொடரின் முடிவை அறிய கடைசி ஆட்டம் வரை காத்திருப்பது சிறப்பான விஷயம்' என்றார்.


Next Story