டி.என்.பி.எல் : கோவை அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி
திண்டுக்கல் அணியில் ஹரி நிஷாந்த் - விஷால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நெல்லை,
6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நெல்லையில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. கோவை அணியில் தொடக்க வீரர்களாக கங்கா ஶ்ரீதர் ராஜூ மற்றும் சுரேஷ் குமார் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் முறையே 33 மற்றும் 37 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து விளையாடிய சுஜித் சந்திரன் மற்றும் முகிலேஷ் சிறப்பாக விளையாடி இருவரும் முறையே 30 மற்றும் 49 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தனர். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹரி நிஷாந்த் - விஷால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 36 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் விஷால் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் அந்த அணியின் மணி பாரதி 7 ரன்களிலும், ஹரிஹரன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் விவேக் 22 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். இறுதியில் 4 பந்துகள் மட்டுமே மீதம் இருக்க திண்டுக்கல் அணி 190 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.