தோனி, கெய்க்வாட் குறித்து தவறாக பேசினேனா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராயுடு
தோனி, கெய்க்வாட் குறித்து நவ்ஜோத் சிங் சித்து கூறிய கருத்துகளை அம்பத்தி ராயுடு தெரிவித்ததாக சில வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவின.
மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவியது. மேலும் நடப்பு சீசனில் சொந்த மண்ணில் முதல் முறையாக தோல்வியை பதிவு செய்தது. அதோடு ஏற்கனவே அந்த அணியிடம் தோற்றிருந்த சென்னை 2-வது முறையாகவும் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் சி.எஸ்.கே அணி தோல்வியை சந்திக்க காரணம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சில தவறான முடிவுகள்தான் என்று பலரும் கூறியிருந்தனர். அதேவேளையில் சென்னை பெற்ற இந்த தோல்விக்கு தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்தான் காரணம் என இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியிருந்தார்.
மேலும் சென்னை அணி வெற்றிபெறும்போது அதற்கு காரணம் தோனிதான் என்று கூறும்போது, சென்னை அணி தோல்வியை சந்தித்தாலும் அதற்கு காரணம் தோனிதான் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இவ்வாறு நவ்ஜோத் சிங் சித்து கூறிய கருத்துகளை முன்னாள் சி.எஸ்.கே வீரரான அம்பத்தி ராயுடு தெரிவித்ததாக சில வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவின. அதனை கண்ட ரசிகர்கள் தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டை எவ்வாறு மோசமாக பேசலாம் என ராயுடுவின் மீது அதிருப்தி அடைந்தனர். அதனால் ரசிகர்கள் மத்தியில் இது பரபரப்பாக மாறியது.
இந்நிலையில் இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அம்பத்தி ராயுடு விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் லக்னோ அணிக்கெதிரான போட்டி நடைபெற்றபோது வர்ணனை செய்யவே இல்லை. என்னுடைய பண்ணை தோப்பில் மாம்பழங்களை பறித்து கொண்டிருந்தேன். அப்படி இருக்கையில் நான் எப்படி அவர்களை பற்றி தவறாக பேசியிருக்க முடியும். முதலில் இதுபோன்ற தவறான செய்திகளை பகிரும் முன்னர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம்" என்று இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.