அதிவேகமாக பந்து வீசுவதில் உம்ரான் மாலிக்குடன் போட்டியா? - நோர்டியா பதில்
தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் 28 வயதான அன்ரிச் நோர்டியா மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசக்கூடியவர்
தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் 28 வயதான அன்ரிச் நோர்டியா மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசக்கூடியவர். காயத்தால் 6 மாதங்கள் ஓய்வில் இருந்த அவர் ஐ.பி.எல். போட்டிக்கு (டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி) திரும்பிய போது பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முதல் 3 ஆட்டங்களில் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் 4-வது ஆட்டத்திற்கு முன்பாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த நோர்டியா, 'நான் இன்னும் சிறந்த நிலையை எட்டவில்லை. உடல் அளவில் இன்னும் 100 சதவீத தகுதியை பெறவில்லை. பழைய நிலைக்கு திரும்ப தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன். பந்துவீச்சில் ஒரு சில விஷயங்களை சரிசெய்ய முயற்சிக்கிறேன். பவுலர்களுக்கு இடையிலான 'அதிவேக யுத்தம்' குறித்து கேட்கிறீர்கள். தற்போது யார் அதிவேகமாக பவுலிங் செய்கிறார்கள்? என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. இந்தியாவின் உம்ரான் மாலிக் (ஐ.பி.எல்.-ல் மணிக்கு 156.9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார்) சிறந்த பவுலர். அதிவேகமாக பவுலிங் செய்கிறார். அதை களத்திலும் காட்டி இருக்கிறார். அவர் வேகமாக பந்து வீசினால் அவருக்கு நல்லது. நான் வேகமாக பந்து வீசினால் எனக்கு நல்லது. மற்றபடி வேகமாக பந்து வீசுவதில் நான் யாருக்கும் போட்டியில்லை. பந்தை வேகமாக வீசுவது ஒரு பொருட்டல்ல. அணியின் வெற்றிக்கு பங்களிப்பு அளிப்பதே முக்கியம்' என்றார்.