'அம்மா வீட்டிற்கு செல்லப்போகிறேன்' என கூறிய தனஸ்ரீ வர்மா; உற்சாகத்தில் ஆட்டம்போட்ட சாஹல் - வீடியோ
நான் என் அம்மா வீட்டிற்கு செல்லப்போகிறேன் என தனஸ்ரீ வர்மா கூறியதை கேட்ட யுஸ்வேந்திர சாஹல் உற்சாகத்தில் ஆட்டம் போட்டார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக தற்போது திகழ்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தனஸ்ரீ வர்மா சமூக வலைத்தளங்களில் மிகவும் 'ஆக்ட்டிவாக' இருப்பவர். இவர் பதிவிடும் நடன வீடியோக்களை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் 'தனஸ்ரீ சாஹல்' என்ற பெயருடன் தனஸ்ரீ தனது சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கணவரின் பெயரை நீக்கி மீண்டும் 'தனஸ்ரீ வர்மா' என மாற்றினார். இதனால் சாஹல்- தனஸ்ரீ வர்மா இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிகிறார்களா? என ரசிகர்கள் குழப்பம் அடைந்து இருந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக யுஸ்வேந்திர சாஹல், "எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள்" என தெரிவித்து இருந்தார்.
அதேபோல், இந்த வதந்திகள் மிகவும் வேதனை தருவதாக சாஹல் மனைவி தனஸ்ரீ வர்மாவும் தெரிவித்துள்ளார். தனது உடல்நலம் மற்றும் விவாகரத்து குறித்த வதந்திகள் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
தனஸ்ரீ வர்மா வெளியிட்டுள்ள பதிவில், "காயம் காரணமாக நான் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். இதனால் எனது கணவர், எனது குடும்பத்தினர் மற்றும் எனது நெருங்கிய உறவினர்கள் உட்பட எனது நெருங்கிய மற்றும் அன்பானவர்களின் ஆதரவும் இதன் மூலம் எனக்கு கிடைத்துள்ளது. இந்த நேரத்தில்தான் எனக்கு மிகவும் ஆதரவு தேவைப்பட்டது. மக்கள் எங்களைப் பற்றிய சில சீரற்ற செய்திகளை பேசியது குறித்து அறிந்த போது வேதனையாக இருந்தது. நான் கடினமாக உழைத்து படிப்படியாக என் மரியாதையைப் பெற்றுள்ளேன். இந்த ஆதாரமற்ற வதந்தியால் அதை இழக்க நான் அனுமதிக்கப் போவதில்லை" என தெரிவித்துள்ளார். இந்த பதிவின் இறுதியில் அவர் "DVC" என பதிவிட்டுள்ளார். தனஸ்ரீ வர்மா சஹால் என்பதை சுருக்கி அவர் அவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சாஹலுடன் இணைந்து எடுத்த நகைச்சுவை வீடியோ ஒன்றை தனஸ்ரீ வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் சாஹல் அருகே அமர்ந்த தனஸ்ரீ, நான் ஒரு மாதம் என் அம்மா வீட்டிற்கு செல்லப்போகிறேன்' என கூறுகிறார். இதை கேட்ட சாஹல் டிவி ரிமோட்டை துக்கி எறிந்துவிட்டு பாலிவுட் பாடலுக்கு நடனமாடுகிறார். சாஹல் உற்சாகத்தில் ஆட்டம்போடுவதை இதை பார்த்து தனஸ்ரீ புன்னகைக்கிறார். இந்த வீடியோவை தனஸ்ரீ வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து, விவகாரத்து தொடர்பாக கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பத்திற்கு சாஹல் - தனஸ்ரீ வர்மா தம்பதி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.