4 வீராங்கனைகளே அனுமதிக்கப்பட்ட நிலையில் 5 வெளிநாட்டு வீராங்கனைகளுடன் களம் இறங்கிய டெல்லி...எவ்வாறு சாத்தியம்..?
பெண்கள் பிரிமீயர் லீக்கில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி-பெங்களூரு அணிகள் மோதின.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி பெற்றது. தொடரின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது.
முதலவாது ஆட்டத்தில் டெல்லி-பெங்களூரு அணிகள் ஆடின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 163 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் டெல்லி அணி தரப்பில் ஆடிய அமெரிக்க வீராங்கனைதாரா நோரிஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் 5 வெளிநாட்டு வீராங்கைகள் ஆடினர். மெக் லானிங் (ஆஸ்திரேலியா), மரிசானே கப் (தென் ஆப்பிரிக்கா), ஆலிஸ் கேப்ஸி (இங்கிலாந்து), ஜெஸ் ஜோனாசென் (ஆஸ்திரேலியா), தாரா நோரிஸ் (அமெரிக்கா) ஆகிய 5 வெளிநாட்டு வீராங்கனைகள் ஆடினர்.
ஒரு அணியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீராங்கனைகளே களம் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி அணியிக் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் களம் இறங்க காரணம் என்னவென்றால் ஐசிசி உறுப்பு நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் அணியில் அங்கம் வகித்தால் 4 வெளிநாட்டு வீராங்கனைகள் மட்டுமின்றி உறுப்பு நாட்டை சேர்ந்த வீராங்கனையையும் சேர்த்து 5 வெளிநாட்டு வீராங்கனைகளை ஆட வைக்கலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உறுப்பு நாடுகள் என்பது ஐசிசி நிரந்தர கிரிக்கெட் உறுப்பினர் நாடுகள் பட்டியலில் இல்லாமல் கிரிக்கெட் ஆடிவரும் பிறநாடுகள். அதன்படியே டெல்லி அணியில் இன்று பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் களம் இறங்கினர். டெல்லி அணி தரப்பில் ஆடிய அமெரிக்க வீராங்கனை தாரா நோரிஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.