தென்னாபிரிக்கா அணியுடன் ஏற்பட்ட தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது- இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் புலம்பல்
தென்னாபிரிக்கா அணியுடன் ஏற்பட்ட தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கூறினார்.
மும்பை,
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது.'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 399 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டுப்போல மளமளவென்று சரிந்தது. பின்னர் 22 ஓவர்களில் இங்கிலாந்து அணி 170 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்விக்கு பின்னர் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர், "இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை அளிப்பதற்கே இங்கு வந்துள்ளோம். முதல் இன்னிங்ஸில் நாங்கள் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. தென்ஆப்ரிக்காவை 340 - 350 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இங்கு நிலவும் வெப்பம் மிகவும் சவாலாக இருந்தது. இனி வரும் அனைத்து ஆட்டங்களிலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.