உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்து 2-வது வெற்றியை பதிவுசெய்த ஆப்கானிஸ்தான்.!


உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்து 2-வது வெற்றியை பதிவுசெய்த ஆப்கானிஸ்தான்.!
x

image credit: @ACBofficials

உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹாக்கும், அப்துல்லா சபீக்கும் களமிறங்கினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. இமாம் உல் ஹாக் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சபீக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிவந்த சபீக், 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நட்சத்திர ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சவுத் சகீல் 25 ரன்களுக்கு அவுட்டானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்சாகி வெளியேறினார்.

இறுதியில் சதாப் கான் (40) மற்றும் இப்திகார் அகமது (40) ஆகியோரின் அதிரடியினால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ரஹிம் களமிறங்கினர். இருவரும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை திரட்டினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 130 ரன்களை சேர்த்த நிலையில் பிரிந்தது. குர்பாஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இப்ரஹிம், 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஹஸ்மத்துல்லா இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள், ரன்களை கட்டுப்படுத்தவும், விக்கெட்டுகளை எடுக்கவும் பல்வேறு யுக்தியை பயன்படுத்தினர். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் ஆட்டம் முழுவதும் ஆப்கானிஸ்தான் கையே ஓங்கி இருந்தது.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அத்துடன், உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

ரஹ்மத் ஷா 77 ரன்களும், கேப்டன் ஹஸ்ரத்துல்லா 48 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி, ஹசன் அலி ஆகியோர் தலார் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.


Next Story