ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: சரிவில் இருந்து எழுச்சி பெறுமா தென்ஆப்பிரிக்கா?-கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்டில் 2-வது நாளிலேயே தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. உள்ளூர் சூழலில் வலுவாக உள்ள ஆஸ்திரேலியா இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. விரலில் ஏற்பட்ட காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக ஹேசில்வுட், ஆஷ்டன் அகர் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது. சிட்னி ஆடுகளம் ஓரளவு சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதாலும், அடுத்து வரும் இந்திய டெஸ்ட் தொடரை மனதில் கொண்டும் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரை பயன்படுத்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதே சமயம் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் மோரிஸ் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில் 78.57 சதவீத புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலியா இந்த டெஸ்லும் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்க அணிக்கு கடந்த ஆண்டு மிகவும் மோசமானதாக அமைந்தது. இன்னிங்சில் 9 முறை 200 ரன்னுக்குள் சுருண்டது. அண்மை காலமாக தென்ஆப்பிரிக்காவின் பேட்டிங் படுசொதப்பலாக உள்ளது. இந்த டெஸ்டிலும் பேட்ஸ்மேன்கள் கேப்டன் டீன் எல்கர், பவுமா, சாரல் எர்வீ உள்ளிட்டோர் கைகொடுக்காவிட்டால், சரிவில் இருந்து மீள்வது கடினம் தான். மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் டி புருன் தாயகம் திரும்பி விட்டார். அவருக்கு பதிலாக வான்டெர் டஸன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 50 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்க அணி, இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கும் வேட்கையுடன் வியூகங்களை தீட்டும் தென்ஆப்பிரிக்காவின் முயற்சி சிட்னியில் பலன் தருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வானிலையை பொறுத்தவரை சிட்னியில் முதல் 4 நாட்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் மழை குறுக்கிடலாம் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ராசியானது. கடைசியாக விளையாடிய 21 டெஸ்டுகளில் ஒன்றில் மட்டுமே தோற்று இருக்கிறது. தென்ஆப்பிரிக்க அணி இங்கு 11 டெஸ்டுகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 8-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது. அந்த ஒரு வெற்றி 1994-ம் ஆண்டு கிடைத்தது ஆகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் அகர், கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயன், ஸ்காட் போலன்ட், ஹேசில்வுட் அல்லது லான்ஸ் மோரிஸ்.
தென்ஆப்பிரிக்கா: சாரல் எர்வீ, டீன் எல்கர் (கேப்டன்), பவுமா, வான்டெர் டஸன் அல்லது ஹென்ரிச் கிளாசென், கயா ஜோன்டா, கைல் வெரைன், மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, இங்கிடி அல்லது சிமோன் ஹர்மெர்
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.