ஆடுகளத்தை சேதப்படுத்திய மாடுகள்; ரத்தான கிரிக்கெட் போட்டி - எங்கு தெரியுமா..?
ஆடுகளத்தின் ஒரு பகுதியை மாடுகள் சேதப்படுத்தியதால் ஆட்டம் ரத்து செய்யட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாசெட்டர்,
உலகெங்கிலும் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் பல காரணங்களால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக சமீபத்தில் லங்கா பிரீமியர் லீக் ஆட்டம் ஒன்றில் பாம்பு நுழைந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதேபோல் கடந்த 2022-ம் ஆண்டில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான போட்டியின் போது குவாஹாட்டியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது.
ஆனால் தற்போது ஆடுகளத்தின் ஒரு பகுதியை மாடுகள் சேதப்படுத்தியதால் ஆட்டம் ரத்து செய்யட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அந்த வினோத சம்பவம் வெஸ்ட் இண்டீசில் தான் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெஸ்ட் இண்டீசில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் டிரினிடாட் & டொபாகோ மற்றும் கயானா அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டம் 4 நாள் ஆட்டமாகும்.
இந்த போட்டியில் முதலில் டிரினிடாட் & டொபாகோ அணி பேட்டிங் ஆடி வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்த பின்னர் அன்று இரவு ஆடுகளத்தின் ஒரு பகுதியை மாடுகள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக டிரினிடாட் & டொபாகோ மற்றும் கயானா இடையேயான போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கரீபியன் கிரிக்கெட் பாட்காஸ்ட் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
பல வித காரணங்களுக்காக ஆட்டம் ரத்து செய்யப்படுகின்ற நிலையில் தற்போது ஆடுகளத்தின் ஒரு பகுதியை மாடுகள் சேதப்படுத்தியதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.