'நியூயார்க் ஆடுகளத்தை கணிக்க முடியவில்லை' - இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி


நியூயார்க் ஆடுகளத்தை கணிக்க முடியவில்லை - இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
x

Image :  PTI 

நியூயார்க் ஆடுகளத்தில் இருந்து என்ன எதிர்பார்ப்பது என்றே தெரியவில்லை. என ரோகித் சர்மா கூறினார்.

நியூயார்க்,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை துவம்சம் செய்தது. இதில் அயர்லாந்தை 96 ரன்னில் சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 12.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கேப்டன் ரோகித் சர்மா 52 ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த நிலையில் பாதியில் வெளியேறினார். 2 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது,

வலது கையில் பந்து தாக்கியதால் கடைசி நேரத்தில் 'ரிட்டயர்ட்ஹர்ட்' ஆகி வெளியேறினேன்.'டாஸ்' போடும்போதே, இந்த ஆடுகளத்தன்மை இப்படி தான் இருக்கும் என்று உறுதியாக எதுவும் சொல்ல முடியாது என்று கூறினேன். 5 மாதத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட இது போன்ற ஆடுகளத்தில் ஆடும் போது, அதன் தன்மை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நாங்கள் 2-வது பேட்டிங் செய்த போது கூட ஆடுகளத்தன்மை மாறவில்லை. ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கிறது. குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து பந்து வீச வேண்டி உள்ளது. அர்ஷ்தீப்சிங் தவிர மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கைகொடுத்தது. அர்ஷ்தீப், ஸ்விங் தாக்குதலில் 2 விக்கெட்டுகளை சாய்த்து நல்ல அடித்தளத்தை அமைத்து தந்தார்.

இங்கு நாங்கள் 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவோம் என்று நினைக்க வேண்டாம். அணியின் சரியான கலவைக்காக அவர்களை தேர்வு செய்தோம். தொடரின் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆடுகளத்தில் இருந்து என்ன எதிர்பார்ப்பது என்றே தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இதே போன்ற சூழ்நிலை இருக்குமேயானால், அதற்கு ஏற்ப நாங்கள் தயாராவோம். இத்தகைய ஆடுகளத்தில் சிறிது நேரம் பேட் செய்த பின்னரே என்ன மாதிரியான ஷாட் ஆடினால் நன்றாக இருக்கும் என்பது தெரியும்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறுகையில், 'இந்த ஆடுகளம் சவாலானதாக இருந்தது. நாங்கள் ஏற்கனவே இங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி இருந்ததால் இந்த மைதானத்தில் இருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதை சமாளிப்பதற்கான போதுமான திறமையும், அனுபவமும் கொண்ட வீரர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். இது போன்ற சூழலில் டாஸ் தான் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் டாஸ் வெல்வது நமது கையில் இல்லை. டாசை இழந்து முதலில் பேட் செய்ய வேண்டிய நிலை வந்தால் கூட, அந்த சவாலான சூழலை திறம்பட எதிர்கொள்வதற்குரிய வழிமுறையை கண்டறிய வேண்டும்' என்றார்.


Next Story