20 ஓவர் உலகக் கோப்பையில் இரு நாட்டு அணிக்காக பங்கேற்ற கோரி ஆண்டர்சன்


20 ஓவர் உலகக் கோப்பையில் இரு நாட்டு அணிக்காக பங்கேற்ற கோரி ஆண்டர்சன்
x

கோரி ஆண்டர்சன் (image courtesy: ICC via ANI)

20 ஓவர் உலகக் கோப்பையில் இரு நாட்டு அணிக்காக பங்கேற்ற 5-வது வீரர் என்ற சிறப்பை கோரி ஆண்டர்சன் பெற்றார்.

டல்லாஸ்,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய நேரப்படி நேற்று காலை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா ('ஏ' பிரிவு) அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்த அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேல் முதலில் கனடாவை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த கனடா 5 விக்கெட்டுக்கு 194 ரன் சேர்த்தது. நவ்னீத் தலிவால் (61 ரன்), நிகோலஸ் கிர்டான் (51 ரன்) அரைசதம் அடித்தனர்.

அடுத்து 195 ரன் இலக்கை நோக்கி களம் இறங்கிய அமெரிக்காவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஸ்டீவன் டெய்லர் ரன் ஏதுமின்றியும், கேப்டன் மோனக் பட்டேல் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஆன்ரியாஸ் கவுசும், ஆரோன் ஜோன்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினர்.

ஸ்கோர் 173-ஐ எட்டிய போது ஆன்ரியாஸ் கவுஸ் 65 ரன்களில் (46 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். கவுஸ் - ஜோன்ஸ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் திரட்டியது. 20 ஓவர் கிரிக்கெட்டில் அமெரிக்க ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுவாகும். இறுதியில் ஜோன்ஸ் தூக்கியடித்த ஒரு மெகா சிக்சருடன் இன்னிங்ஸ் சுபமாக முடிவுக்கு வந்தது. அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்களுடனும் (40 பந்து, 4 பவுண்டரி, 10 சிக்சர்), கோரி ஆண்டர்சன் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

அமெரிக்க ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன் முன்பு நியூசிலாந்து அணிக்காக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன் மூலம் 20 ஓவர் உலகக் கோப்பையில் இரு நாட்டு அணிக்காக பங்கேற்ற 5-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே திர்க் நேன்னஸ் (நெதர்லாந்து, ஆஸ்திரேலியா), வான்டெர் மெர்வ் (தென்ஆப்பிரிக்கா, நெதர்லாந்து), டேவிட் வைஸ் (தென்ஆப்பிரிக்கா, நமிபியா). மார்க் சாப்மேன் (ஹாங்காங், நியூசிலாந்து) ஆகியோர் இரண்டு அணிகளுக்காக உலகக் கோப்பை போட்டியில் ஆடியுள்ளனர்.

கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான அமெரிக்கா, கனடா அணிகள் பலநாட்டு வீரர்களின் கலவையில் உருவாகியுள்ளது. இரு அணியையும் சேர்த்து நேற்றைய ஆடும் லெவனில் இடம் பெற்ற 22 வீரர்களையும் கணக்கிட்டால், அவர்கள் 10 வெவ்வேறு நாடுகளில் பிறந்துள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேல் இந்தியாவை சேர்ந்தவர். கனடா கேப்டன் சாத் பின் ஜாபர் பாகிஸ்தானில் பிறந்தவர்.


Next Story