23 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேச அணியின் பயிற்சியாளராக சாதித்த சந்திரகாந்த் பண்டிட்


23 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேச அணியின் பயிற்சியாளராக சாதித்த சந்திரகாந்த் பண்டிட்
x

மத்திய பிரதேச அணியின் கேப்டனாக 23 ஆண்டுகளுக்கு முன் கோப்பையை தவறவிட்ட சந்திரகாந்த் பண்டிட், தற்போது பயிற்சியாளராக அதனை சாதித்துள்ளார்.

பெங்களூரு,

மத்தியபிரதேச அணியின் பயிற்சியாளராக 60 வயதான சந்திரகாந்த் பண்டிட் உள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர் மும்பை, மத்தியபிரதேசம், அசாம் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். இதற்கு முன்பு மத்தியபிரதேச அணி ஒரே ஒரு முறை ரஞ்சி கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. அப்போது மத்தியபிரதேச அணியின் கேப்டனாக இருந்தவர் சந்திரகாந்த் பண்டிட் தான்.

கடந்த 1999-ம் ஆண்டு இதே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ரஞ்சி இறுதி ஆட்டத்தில் சந்திரகாந்த் பண்டிட் தலைமையிலான மத்தியபிரதேச அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. வேதனையில் கண்ணீர் விட்ட சந்திரகாந்த் பண்டிட் இப்போது 23 ஆண்டுகள் கழித்து ஒரு பயிற்சியாளராக அதே இடத்தில் சாதித்து காட்டி இருக்கிறார்.

அவர் கூறுகையில், "23 ஆண்டுக்கு முன் இதே மைதானத்தில் தோல்வியோடு வெளியேறினேன். கடவுளின் கருணையால் 23 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியபிரதேச அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறேன். இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான நாள். மத்திய பிரதேச அணிக்காக நான் 6 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அந்த அணியின் கலாசாரம் எனக்கு தெரியும்.

அது மட்டுமின்றி மத்தியபிரதேச அணி ரஞ்சி கோப்பையை வெல்ல மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அதனால் தான் அந்த அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்பு வந்ததும் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டேன்" என்றார். பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் வென்ற 6-வது ரஞ்சி கோப்பை இதுவாகும். ஏற்கனவே மும்பை 3 முறையும், விதர்பா 2 முறையும் அவரது பயிற்சியின் கீழ் வாகை சூடியுள்ளது.


Next Story