ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு..? அகமதாபாத் வானிலை நிலவரம்
அகமதாபாத் மைதானத்தில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
அகமதாபாத்,
ஐபிஎல் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அதே வேளையில், போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் மழைக்கான வாய்ப்பும் இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இன்று மதிய நிலவரப்படி வானம் ஓரளவு தெளிவாக இருந்தது. ஆனாலும் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அகமதாபாத்தில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. இன்று மாலையில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்குப் பிறகு போட்டி தொடங்கி குறைந்தபட்சம் 5 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால், போட்டியை நடத்த மற்றொரு நாள் (ரிசர்வ் நாள்) ஒதுக்கப்படும். ஆனால், சில கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்படும். இன்று குறைந்தபட்சம் ஒரு பந்தாவது வீசப்பட்டால், ரிசர்வ் நாள் போட்டி முந்தைய நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி நடைபெறும்.
இன்று டாஸ் போடப்பட்டாலும், ஆட்டம் நடக்காத சூழ்நிலையில், நாளை இரு தரப்புக்கும் 20 ஓவர் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு போட்டி தொடங்கும். ரிசர்வ் நாளில் மீண்டும் டாஸ் போடப்படும். அணிகளில் மாற்றம் செய்ய கேப்டன்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
போட்டி நடைபெற்று முடியும் வரையில் மழை பெய்யாது, வானம் தெளிவாக இருக்கவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.