இதற்கு மேல் சிறப்பாக செயல்படும்படி வீரர்களிடம் கேட்க முடியாது - சி.எஸ்.கே. கேப்டன் கெய்க்வாட்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிராக சி.எஸ்.கே. தோல்வியடைந்தது.
லக்னோ,
10 அணிகள் பங்கேற்றுள்ள நடப்பு ஐ.பி.எல். சீசனின் 34-ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி தோல்வியடைந்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே. அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 57 ரன்களையும், ரஹானே 36 ரன்களையும், இறுதி கட்டத்தில் களமிறங்கிய தோனி 9 பந்துகளில் 28 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 180 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக கே.எல் ராகுல் 82 ரன்களையும், குவிண்டன் டி காக் 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் :
"நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். இதற்கு மேல் சிறப்பாக செயல்படும்படி வீரர்களிடம் கேட்க முடியாது. பவர் பிளேவிற்கு பிறகு நல்ல துவக்கம் கிடைத்தும் மிடில் ஓவர்களில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியவில்லை. இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக குவித்து விட்டோம்.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதினால் எப்போதுமே போட்டிக்கு 20 ரன்கள் வரை கூடுதலாக தேவை. அந்த வகையில் இந்த மைதானத்தில் 190 ரன்கள் வரை அடித்திருந்தால் சரியான ஸ்கோராக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருப்பினும் அடுத்த போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் அவர்களை எதிர்கொள்ள காத்திருக்கிறோம்" என்று கூறினார்.