சிக்சரால் காயமடைந்த கேமராமேன்...ரிஷப் பண்ட் செய்த நெகிழ்ச்சி செயல்
நேற்றைய போட்டியில் பண்ட் அடித்த ஒரு சிக்சர் போட்டியை படம் பிடித்துக் கொண்டிருந்த கேமராமேன் மேலே பட்டு காயத்தை ஏற்படுத்தியது.
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்சும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்சும் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கேப்டன் ரிஷப் பண்ட் - அக்சர் படேல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இவர்களின் அதிரடியால் டெல்லி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 88, அக்சர் படேல் 66 ரன்கள் எடுத்தனர். குஜராத் சார்பில் அதிகபட்சமாக சந்திப் வாரியர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 220 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. டெல்லி அணியின் இந்த வெற்றிக்கு 84 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக மொகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 2, 6, 4, 6, 6, 6 என 30 ரன்கள் அடித்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளார்.
அந்த வகையில் மொத்தமாக இப்போட்டியில் அவர் அடித்த 8 சிக்சர்களில் ஒரு சிக்சர் போட்டியை படம் பிடித்துக் கொண்டிருந்த "தேபாசிஷ்" எனும் பெயரை கொண்ட கேமராமேன் மேலே பட்டு காயத்தை ஏற்படுத்தியது. அதற்காக போட்டியின் முடிவில் ரிஷப் பண்ட் மனதார மன்னிப்பு கேட்டது பின்வருமாறு:-
"மன்னிக்கவும் தேபாசிஷ் பாய். வேண்டுமென்றே உங்களை அடிக்கவில்லை. ஆனால் நீங்கள் விரைவாக குணமடைவீர்கள் என்று நினைக்கிறேன். அதற்காக குட் லக்" என்று கூறியுள்ளார். ஐ.பி.எல். நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.