தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் கேப்டன்சி குறித்து மனம் திறந்த பும்ரா


தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் கேப்டன்சி குறித்து மனம் திறந்த பும்ரா
x
தினத்தந்தி 18 Aug 2024 12:00 AM GMT (Updated: 18 Aug 2024 12:00 AM GMT)

கேப்டனாக இல்லையென்றாலும் விராட் கோலி இப்போதும் தலைவராக இருக்கிறார் என்று பும்ரா கூறியுள்ளார்.

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

ஏனெனில் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக பந்து வீசி இருந்தார். இந்த தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி நிலையில், மிகக்குறைவான ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அதன் காரணமாக அவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த 2016-ல் தோனி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான அவர் வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசினார். அதன் காரணமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அசத்திய அவரால் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் காணப்பட்டன.

ஆனால் 2018-ம் ஆண்டு விராட் கோலி தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றி நாயகனாக அவதரித்தார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வரும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இந்தளவுக்கு தாம் வளர்வதற்கு உதவிய இந்திய கேப்டன்கள் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை பற்றி பும்ரா பேசியுள்ளார்.

இது குறித்து பும்ரா பேசியது பின்வருமாறு:- "பேட்ஸ்மேனாக இருந்தாலும் பந்து வீச்சளார்களிடம் அனுதாபம் கொள்ளும் சில கேப்டன்களில் ரோகித் சர்மா ஒருவர். அவர் வீரர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு ஒரு வீரர் என்ன செய்கிறார் என்பதை அறிந்து செயல்படுவார். ரோகித் சர்மா மிகவும் கடுமையானவர் அல்ல. அவர் பவுலர்களின் கருத்துகளை கேட்க திறந்த மனதுடன் தயாராக இருப்பார்.

எம்எஸ் தோனி எனக்கு நிறைய பாதுகாப்பும் ஆதரவும் கொடுத்தார். அவர் எப்போதும் தன்னுடைய உள்ளுணர்வுகள் மீது அதிக தன்னம்பிக்கை வைப்பார். தோனி எப்போதும் அதிகமாக திட்டமிடுதலை நம்ப மாட்டார்.

விராட் கோலி ஆற்றலால் வழி நடத்தக்கூடிய ஆர்வம் மிகுந்தவர். அவர் எங்களை பிட்னஸ் விஷயத்தில் மாற்றினார். கேப்டனாக இல்லையென்றாலும் விராட் கோலி இப்போதும் தலைவராக இருக்கிறார். கேப்டன் என்பது ஒரு பதவி மட்டுமே. ஏனெனில் ஒரு அணியை 11 பேர்தான் நடத்துகின்றனர்" என்று கூறினார்.


Next Story