புச்சிபாபு கிரிக்கெட்: லீக் ஆட்டத்தில் தமிழக கிரிக்கெட் சங்க லெவன் அணி வெற்றி


புச்சிபாபு கிரிக்கெட்: லீக் ஆட்டத்தில் தமிழக கிரிக்கெட் சங்க லெவன் அணி வெற்றி
x

தமிழக லெவன் அணி 7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கோவை,

12 அணிகள் பங்கேற்றுள்ள புச்சிபாபு நினைவு அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன்-கேரளா இடையிலான லீக் ஆட்டம் (டி பிரிவு) நெல்லையில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் கேரளா 218 ரன்னில் அடங்கியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி 2-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தமிழக லெவன் அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதையடுத்து 140 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய கேரளா 59.3 ஓவர்களில் 178 ரன்னில் சுருண்டது. ஜதாவேத் சுப்பிரமணியன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 39 ரன் இலக்கை ஷாருக்கான் தலைமையிலான தமிழக லெவன் அணி 7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 7 புள்ளிகளை தட்டிச் சென்றது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் - இந்தியன் ரெயில்வே (ஏ பிரிவு) இடையிலான ஆட்டம் கோவையில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியன் ரெயில்வே 327 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்று நிதானமாக ஆடிய தமிழக தலைவர் லெவன் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 333 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. விமல்குமார் 144 ரன்களும், முகமது 45 ரன்களும் எடுத்தனர். 6 ரன் பின்தங்கிய இந்தியன் ரெயில்வே 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story