உலக அளவில் புதிய கல்வி செயலியை அறிமுகப்படுத்தும் சவுரவ் கங்குலி..!!
சவுரவ் கங்குலி தனது ராஜினாமா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மும்பை,
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 30 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்து உள்ளதாகவும் மேலும், இந்த பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.
இனி பலருக்கும் உதவும் வகையில் ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த புதிய அத்தியாத்திற்கும் அனைவரும் ஆதரவு இருக்கும் என நம்புவதாக பதிவிட்டு இருந்தார். சவுரவ் கங்குலியின் இந்த பதிவால் அவர் பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலகக் கூடும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலக மாட்டார் என்று பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தெரிவித்தார்.
இந்த நிலையில் சவுரவ் கங்குலி தனது ராஜினாமா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து கங்குலி கூறுகையில், "நான் உலக அளவில் ஒரு புதிய கல்வி செயலியை அறிமுகப்படுத்துகிறேன். ராஜினாமா குறித்து வெளியான வதந்திகள் குறித்து நான் ஆச்சரியப்பட்டேன். இது ஒரு எளிய டுவீட். ராஜினாமா பற்றி எதுவும் நான் குறிப்பிடவில்லை" என தெரிவித்துள்ளார்.