பானுகா-தவான் அதிரடி: பஞ்சாப் 191 ரன்கள் குவிப்பு...!
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் ஆடி வருகின்றன.
மொகாலி,
16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதன்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்துக்கான டாசில் ஜெயித்த கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதிரடியில் மிரட்டிய பிரம்சிம்ரன் சிங் 23 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து பனுகா ராஜபக்சே களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய ராஜபக்சே 30 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த நிலையில் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 பந்தில் 50 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து தவானுடன் ஜித்தேஷ் ஷர்மா ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் ஷர்மா 11 பந்தில் 21 ரன் எடுத்த நிலையிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவான் 40 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து ஜிம்பாப்வே ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசா மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ராசா 16 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி ஆட உள்ளது.