மகிழ்ச்சியில் வங்காளதேச வீரர்கள்... கோபத்தில் விராட் கோலி.. பரபரப்பான கட்டத்தில் மிர்பூர் டெஸ்ட்


மகிழ்ச்சியில் வங்காளதேச வீரர்கள்... கோபத்தில் விராட் கோலி.. பரபரப்பான கட்டத்தில் மிர்பூர் டெஸ்ட்
x

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 145 ரன்கள் இலக்கை நோக்கி ஆடும் இந்தியா 4 முன்னணி விக்கெட்டுகளை இழந்து திணறுகிறது.

மிர்புர்,

டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வங்காளதேசம் 227 ரன்களும், இந்தியா 314 ரன்களும் எடுத்தன. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசத்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. தொடக்க ஆட்டக்காரர் ஜாகிர் ஹசன் தனது பங்குக்கு 51 ரன்கள் (135 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 113 ரன்களுடன் தள்ளாடிய அந்த அணி 150 ரன்னுக்குள் சுருண்டு விடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி கட்ட வீரர்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி அணியை நிமிர வைத்தனர்.

145 ரன் இலக்கு

லிட்டான் தாஸ் 73 ரன்களும் (98 பந்து,7 பவுண்டரி), விக்கெட் கீப்பர் நுருல் ஹசன், தஸ்கின் அகமது தலா 31 ரன்களும் விளாசினர். முடிவில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 70.2 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் அந்த அணி இந்தியாவுக்கு 145 ரன்களை வெற்ற இலக்காக நிர்ணயித்தது.

இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 3 விக்கெட்டும், அஸ்வின், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு குல்தீப் யாதவ் இருந்திருந்தால் நிச்சயம் இந்த ஆடுகளத்தில் அந்த அணியை இதை விட குறைந்த ஸ்கோரில் முடக்கி இருக்கலாம். அவரை நீக்கியதன் விளைவை இந்திய அணி நிர்வாகம் இப்போது உணர்ந்திருக்கும்.

புஜாரா-கோலி சொதப்பல்

பின்னர் 145 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய வீரர்களும் திண்டாடினர். ஆடுகளம் முழுக்க முழுக்க சுழலுக்கு சாதகமாக மாறியதால் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்ஸ்மேனை சுற்றி பீல்டர்களை நிறுத்தி இடைவிடாது சுழல் தாக்குதலை தொடுத்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் (2 ரன்), சுப்மான் கில் (7 ரன்), புஜாரா (6 ரன்) வரிசையாக சுழல் வலையில் சிக்கினர். முன்னாள் கேப்டன் விராட் கோலியாவது சரிவை தடுத்து நிறுத்துவாரா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்திய விராட் கோலி (1 ரன், 22 பந்து) மெஹிதி ஹசனின் பந்து வீச்சில் அருகில் நின்ற பீல்டர் மொமினுல் ஹக்கிடம் கேட்ச் ஆனார்.

தற்காப்பு ஆட்டத்திற்கு பதிலாக அவர் சில ஷாட்டுகளை அடித்திருந்தாலும் பயனுள்ளதாக இருந்திருக்கும். கோலி வெளியேறியதும் இந்தியாவுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது.

நேற்றைய முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 23 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 45 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அக்ஷர் பட்டேல் 26 ரன்களுடனும் (54 பந்து, 3 பவுண்டரி), உனட்கட் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

வெற்றி பெறப்போவது யார்?

பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த டெஸ்டில் இரு அணிக்குமே வெற்றி வாய்ப்பு சரிசமமாக தென்படுகிறது. இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 100 ரன்கள் தேவைப்படுகிறது. அடுத்து வரும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யரைத் தான் இந்திய அணி மலைபோல் நம்பி இருக்கிறது.

வங்காளதேச அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்ய இன்னும் 6 விக்கெட் தேவையாக உள்ளது. இந்திய அணி வெற்றிகரமாக இலக்கை விரட்டிப்பிடித்தால் அது இந்த மைதானத்தில் 3-வது அதிகபட்ச சேசிங்காக இருக்கும். இன்று 4-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

விராட் கோலி கோபம்

மிர்புர் டெஸ்டில் வங்காளதேச வீரர் லிட்டான் தாசுக்கு ஸ்லிப்பில் இரண்டு முறை கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்ட இந்திய வீரர் விராட் கோலி பேட்டிங்கிலும் சொதப்பினார். 22 பந்துகளை சந்தித்த அவர் ஒரு ரன்னில் கேட்ச் ஆனார். அவர் அவுட் ஆனதும் வங்காளதேச வீரர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்தனர். அவர்களில் ஒரு வீரர் அவரை நோக்கி ஏதோ சொல்ல கோபமடைந்த விராட் கோலி, வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசனிடம் அது பற்றி கூறினார். பிறகு நடுவர்கள் தலையிட்டு கோலியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story