வங்காளதேச அணியின் செயல் அவமானகரமானது: மேத்யூஸ் ஆதங்கம்
இலங்கை வீரர் மேத்யூஸ் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
புதுடெல்லி,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 279 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 280 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேசம் அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 282 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோதுஇலங்கை வீரர் மேத்யூஸ் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
.2023-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான விதிப்படி ஒரு வீரர் ஆட்டமிழந்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர் கொள்ள வேண்டும். மேத்யூஸ் உடனடியாக மைதானத்துக்கு வந்தாலும் பந்தை எதிர்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. அவரது ஹெல்மெட்டில் பிரச்சினை இருந்ததால் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி மற்ற இலங்கை வீரர்களிடம் கூறினார்.இதில் தாமதம் ஏற்பட்டதால் வங்காளதேச கேப்டன் ஷகிப்-அல்-ஹசன், நடுவர்களிடம் அதை சுட்டிகாட்டி டைம் அவுட் கேட்டார். இதையடுத்து மேத்யூசுக்கு டைம் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தியுடன் வெளியேறினார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆட்டம் முடிந்த பின்னர் மேத்யூஸ் கூறியதாவது,
வங்காளதேச அணி விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஷகிப்-அல்-ஹசன் மற்றும் வங்காளதேச அணியின் செயல் வெளிப்படையாக அவமானகரமானது.
விதிகளின்படி, இரண்டு நிமிடங்களில் நான் தயாராகி கிரீஸுக்குள் வந்துவிட்டேன். ஆனால், ஹெல்மெட்டில் திடீரென பிரச்சினை வந்துவிட்டது. அதை நடுவர்களும் பார்த்தனர். அப்போது எனக்கு 5 வினாடிகள் இருந்தன.நான் ஹெல்மெட்டை காட்டிய பிறகு வங்காளதேச அணியினர் மேல்முறையீடு செய்ததாக நடுவர்கள் கூறினார்கள்.எனது இரண்டு நிமிடங்கள் முடிவடையாததால், பொது அறிவு எங்கே என்று கேட்டேன். இதை விளக்குவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணியோ அல்லது வீரரோ இந்த அளவுக்கு கீழே இறங்கியதை பார்த்ததில்லை. துரதிருஷ்டவசமாக ஹெல்மெட்டின் பட்டை உடைந்தது. அந்த சமயத்தில் இதுபோன்று (டைம் அவுட்) வேறு அணியும் செய்யும் என்று நான் நினைக்கவில்லை. எனது உபகரணம் செயலிழந்தது. இது ஒரு பாதுகாப்பு பிரச்சினை. ஹெல்மெட் இல்லாமல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது.ஷகிப்-அல்-ஹசன் மீதும் வங்காளதேச அணி மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். நீங்கள் அனைவரும் வெற்றி பெற விளையாடுங்கள். அது விதிகளுக்குள் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் நான் இரண்டு நிமிடங்களுக்குள் களத்தில் இருந்தேன். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.