சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அறிவிப்பு!


சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அறிவிப்பு!
x

image courtesy; ICC

தினத்தந்தி 9 Nov 2023 9:16 AM IST (Updated: 9 Nov 2023 11:23 AM IST)
t-max-icont-min-icon

மெக் லானிங் ஆஸ்திரேலிய அணிக்கு 182 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த மெக் லானிங் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 31 வயதான அவர், ஆஸ்திரேலிய அணிக்க்காக 182 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு தனது 18 வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகம் ஆன மெக் லானிங் 13 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்று ஓய்வு அறிவித்துள்ளார்.

2014ல் ஆஸ்திரேலியாவை முதன்முதலில் வழிநடத்திய லானிங், பெண்கள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக வலம் வருகிறார். 78 ஒருநாள் போட்டிகளில் 69 வெற்றிகள், 100 டி20 போட்டிகளில் 76 வெற்றிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி என ஆஸ்திரேலியாவை வெற்றிகரமாக வழிநடத்தி உள்ளார். மேலும் அவர் தனது கேப்டன்ஷிப்பில் ஆஸ்திரேலிய அணிக்கு நான்கு டி20 உலகக்கோப்பைகள், ஒரு 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.

ஓய்வு குறித்து அவர் கூறுகையில், "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவது என்பது கடினமான முடிவு. ஆனால் இப்போதுதான் எனக்கு சரியான நேரம் என்று உணர்கிறேன். 13 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை அனுபவித்த நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி. அதனால் ஓய்வு பெற இப்போது சரியான நேரம் என்று எனக்குத் தெரியும். என்னால் சாதிக்க முடிந்ததைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் "நான் விரும்பும் விளையாட்டை விளையாட அனுமதித்த எனது குடும்பத்தினர், எனது அணியினர், கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறினார்.

லானிங் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாகவும் இருந்தார். அந்த சீசனில் டெல்லி அணி 2-வது இடம் பிடித்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் லானிங் உள்ளூர் டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story