ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மறைந்த வீரர் சைமன்ஸ்ட்சுக்கு அஞ்சலி
சைமண்ட்ஸ் பயன்படுத்திய பொருட்களை அவரது குடும்பத்தினர் ஆடுகளத்தில் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர்.
டவுன்ஸ்வில்லே,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் டவுன்ஸ்வில்லேயில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 47.3 ஓவர்களில் 200 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 33.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 57 ரன்னும், ஸ்டீவன் சுமித் 48 ரன்னும், கிளைன் மேக்ஸ்வெல் 32 ரன்னும் (9 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.
இந்த ஆட்டத்தின் போது, கடந்த மே மாதம் விபத்தில் பலியான ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்சுக்கு வீரர்கள், ரசிகர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இது சைமண்ட்சின் சொந்த ஊர் மைதானமாகும். இன்னிங்ஸ் இடைவேளையின்போது சைமண்ட்ஸ் பயன்படுத்திய தொப்பி, பேட், மீன் பிடிக்கும் தூண்டில், நண்டு வலை ஆகியவற்றை அவரது குடும்பத்தினர் ஆடுகளத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அவர் வளர்த்த இரண்டு நாய்களும் மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன. மேலும், ஆஸ்திரேலிய வீரர்களுக்கான பகுதியில் சைமண்ட்சின் மகன் பில்லி,மகள் குளோ உட்கார வைக்கப்பட்டனர். அவர்கள் ஜாலியாக தண்ணீர் பாட்டில்களை எடுத்து சென்று வீரர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.