ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் : 'பாக்சிங் டே' டெஸ்ட் நாளை தொடக்கம்
ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
மெல்போர்ன்,
டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் 36 வயதான டேவிட் வார்னருக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 14-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெறும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக சதம் அடிக்காத ஏக்கத்தை தணிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். அவரும் இந்த டெஸ்டில் பழைய மாதிரி விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
'பாக்சிங் டே' போட்டி
கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது. 'பாக்சிங் டே' என்றால் ஒருவருக்கொருவர் சண்டையிடும் நாள் என்றும் அர்த்தம் கிடையாது. இதன் பின்னணியில் சில ருசிகர வரலாறு உண்டு. அதன் விவரம் வருமாறு:-
*இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். ஆலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள். மறுநாள் அதாவது டிசம்பர் 26-ந்தேதி அன்று பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் நாளை ' பாக்சிங் டே' என்று அழைக்கிறார்கள்.
*ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது, அவர்களின் முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்கும் பழக்கம் இருந்தது. அதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
*முந்தைய காலத்தில் காற்றால் இயக்கப்படும் கப்பல்களில் மேற்கொள்ளப்படும் பயணம் எந்த ஆபத்தும் இன்றி பாதுகாப்பாக அமைய வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பணம் அடங்கிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். பயணம் நிறைவு பெற்றதும் அந்த பணம் பாதிரியாரிடம் ஒப்படைக்கப்படும். கிறிஸ்துமஸ் அன்று அது திறக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும். இதுவும் 'பாக்சிங் டே' பெயருக்கு ஒரு அச்சாரமாக சொல்லப்படுகிறது.
மெல்போர்னில்...
1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சில காரணங்களால் சில ஆண்டுகள் அந்த போட்டியை குறிப்பிட்ட நாளில் நடத்த முடியாமல் போய் இருக்கிறது. என்றாலும் 1980-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் 'பாக்சிங் டே' நாளான டிசம்பர் 26-ந்தேதி அன்று ஏதாவது ஒரு அணி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடிக் கொண்டு இருக்கும். அந்த வகையில் இந்த முறை 'பாக்சிங் டே'யில் தென்ஆப்பிரிக்க அணி மல்லுக்கட்டுகிறது.
பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்ட் வெறும் 2 நாளுக்குள் முடிந்து போனதால் அது தரமற்ற ஆடுகளம் என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து மெல்போர்ன் ஆடுகளம் சர்ச்சைக்கு இடமில்லாமல் மிக நன்றாக அமைய வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்க அணி இதுவரை 12 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டிருப்பது நினைவு கூரத்தக்கது.