'இன்று கடைசி நாள்' உலக டெஸ்ட் சாம்பியன் யார்? இந்தியா வெற்றிபெற 280 ரன்கள் தேவை...! ஆஸ்திரேலியா வெற்றிபெற 7 விக்கெட் தேவை...!


இன்று கடைசி நாள் உலக டெஸ்ட் சாம்பியன் யார்? இந்தியா வெற்றிபெற 280 ரன்கள் தேவை...! ஆஸ்திரேலியா வெற்றிபெற 7 விக்கெட் தேவை...!
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு 444 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

உலக டெஸ்ட் இறுதிப்போட்டி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. ஸ்டீவன் சுமித் (121 ரன்கள்), டிராவிஸ் ஹெட் (163 ரன்கள்) சதம் அடித்தனர். அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ரஹானே (89 ரன்கள்), ஷர்துல் தாக்குர் (51 ரன்கள்) அரைசதம் அடித்தனர். பின்னர் 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் முடிவில் 44 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. லபுஸ்சேன் 41 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 7 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

அலெக்ஸ் கேரி அரைசதம்

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய லபுஸ்சேன் 41 ரன்னில் (126 பந்து, 4 பவுண்டரி) உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி களம் இறங்கினார். முதல் இன்னிங்சை போல் இதிலும் அலெக்ஸ் கேரி ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்து வேகமாக ரன் சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேமரூன் கிரீன் 25 ரன்னில் (95 பந்து, 4 பவுண்டரி) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் போல்டு ஆனார்.

இதையடுத்து மிட்செல் ஸ்டார்க், அலெக்ஸ் கேரியுடன் கைகோர்த்தார். இருவரும் நேர்த்தியாக விளையாடினர். மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அலெக்ஸ் கேரி 82 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவர் அடித்த 4-வது அரைசதம் இதுவாகும். நன்றாக ஆடிய மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் (57 பந்து, 7 பவுண்டரி) முகமது ஷமி பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற விராட்கோலியிடம் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் கம்மின்ஸ் (5 ரன்) வந்த வேகத்திலேயே முகமது ஷமி பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் அக்ஷர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஆஸ்திரேலியா 270 ரன்னில் டிக்ளேர்

அத்துடன் ஆஸ்திரேலிய அணி 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. அப்போது அலெக்ஸ் கேரி 66 ரன்னுடன் (105 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், முகமது ஷமி, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.இதனை தொடர்ந்து இந்திய அணிக்கு 444 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்வளவு பெரிய ஸ்கோரை எந்த அணியும் எட்டிப்பிடித்ததில்லை. 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 418 ரன்களை எட்டிப்பிடித்ததே அதிகபட்சமாகும். மேலும் ஓவல் மைதானத்தில் 300 ரன்களை கூட எந்த அணியும் எட்டியது கிடையாது.

கில் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்

புதிய வரலாறு படைக்கும் முனைப்புடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட சுப்மன் கில் 18 ரன்னில் (19 பந்து, 2 பவுண்டரி) சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார். ஸ்காட் போலன்ட் வீசிய பந்தை கில் தடுத்து ஆட முயற்சித்தார். அப்போது எட்ஜாஜி தாழ்வாக சென்ற பந்தை கேமரூன் கிரீன் இடது கையால் பிடித்தபடி தரையில் விழுந்தார். அப்போது பந்தை பிடித்து இருந்த அவரது கை தரையில் உரசியது. இதனால் கில் வெளியேறாமல் நின்றார். உடனடியாக கள நடுவர்கள் 3-வது நடுவரிடம் அப்பீல் செய்தனர். வீடியோ பதிவை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த 3-வது நடுவர் கேட்ச் சரியானது என்று உறுதி செய்ததால் கில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தேனீர் இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்து இருந்தது.

தேனீர் இடைவேளைக்கு பிறகு புஜாரா, தொடக்க வீரர் ரோகித் சர்மாவுடன் இணைந்தார். சிறப்பாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா 43 ரன்னில் (60 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) நாதன் லயனின் சுழலில் எல்.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். நடுவரின் முடிவை எதிர்த்து அவர் செய்த அப்பீலுக்கு பலன் கிடைக்கவில்லை. அடுத்த ஓவரில் புஜாரா (27 ரன்கள், 47 பந்து, 5 பவுண்டரி) கம்மின்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து 2 விக்கெட் வீழ்ந்ததால் இந்தியா தடுமாற்றம் கண்டது.

விராட்கோலி அசத்தல்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரஹானே, விராட்கோலியுடன் கைகோர்த்தார். இருவரும் நேர்த்தியாக செயல்பட்டு அணியை சரிவில் இருந்து மீட்டு நம்பிக்கை அளித்தனர். நேற்றைய ஆட்டம் முடிவில் இந்திய அணி 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. விராட்கோலி 44 ரன்னுடனும் (60 பந்து, 7 பவுண்டரி), ரஹானே 20 ரன்னுடனும் (59 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் உள்ளனர். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 71 ரன்கள் சேர்த்துள்ளனர்.

இந்தியா வரலாறு படைக்குமா?

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்திய அணியின் வெற்றிக்கு மேலும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளது. இதனால் இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்றைய கடைசி நாளில் இந்திய அணி இலக்கை எட்டி வரலாறு படைக்குமா? அல்லது ஆஸ்திரேலிய அணி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா 469

இந்தியா 296

2-வது இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

உஸ்மான் கவாஜா (சி) பரத்

(பி) உமேஷ் யாதவ் 13

டேவிட் வார்னர் (சி) பரத் (பி)

முகமது சிராஜ் 1

லபுஸ்சேன் (சி) புஜாரா (பி)

உமேஷ் யாதவ் 41

ஸ்டீவன் சுமித் (சி) தாக்குர்

(பி) ரவீந்திர ஜடேஜா 34

டிராவிஸ் ஹெட் (சி) அண்ட்

(பி) ரவீந்திர ஜடேஜா 18

கேமரூன் கிரீன் (பி)

ரவீந்திர ஜடேஜா 25

அலெக்ஸ் கேரி (நாட்-அவுட்) 66

மிட்செல் ஸ்டார்க் (சி) கோலி

(பி) முகமது ஷமி 41

கம்மின்ஸ் (சி)சப்-அக்ஷர் பட்டேல்

(பி) முகமது ஷமி 5

எக்ஸ்டிரா 26

மொத்தம் (84.3 ஓவர்களில்

8 விக்கெட்டுக்கு டிக்ளேர்) 270

விக்கெட் வீழ்ச்சி: 1-2, 2-24, 3-86, 4-111, 5-124, 6-167, 7-260, 8-270.

பந்து வீச்சு விவரம்:

முகமது ஷமி 16.3-6-39-2

முகமது சிராஜ் 20-2-80-1

ஷர்துல் தாக்குர் 8-1-21-0

உமேஷ் யாதவ் 17-1-54-2

ரவீந்திர ஜடேஜா 23-4-58-3

இந்தியா

ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ.

(பி) லயன் 43

சுப்மன் கில் (சி) கிரீன் (பி)

போலன்ட் 18

புஜாரா (சி) அலெக்ஸ் கேரி

(பி) கம்மின்ஸ் 27

விராட்கோலி (நாட்-அவுட்) 44

ரஹானே (நாட்-அவுட்) 20

எக்ஸ்டிரா 12

மொத்தம் (40 ஓவர்களில்

3 விக்கெட்டுக்கு) 164

விக்கெட் வீழ்ச்சி: 1-41, 2-92, 3-93.

பந்து வீச்சு விவரம்:

கம்மின்ஸ் 9-0-42-1

ஸ்காட் போலன்ட் 11-1-38-1

மிட்செல் ஸ்டார்க் 7-0-45-0

கேமரூன் கிரீன் 2-0-6-0

நாதன் லயன் 11-1-32-1


Next Story