அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் அணி...வரலாற்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா...!


அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் அணி...வரலாற்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா...!
x

Image Courtesy: AFP

அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலியா படைத்தது.

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நேற்றைய 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்திருந்தது.இந்நிலையில், இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கின.

கோலி 49 ரன்களுடனும், ஜடேஜா (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்ற ரஹானே 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷர்துல் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார். உமேஷ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். சற்று நிலைத்து நின்று ஆடிய பரத் 23 ரன்னில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது.

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலியா அணி படைத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய சர்வதேச தொடர்களை நடத்தி வருகிறது. இந்த 4 விதமான தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா வென்ற ஐசிசி தொடர்கள் விவரம்:

50 ஓவர் உலகக்கோப்பை: 1987, 1999, 2003, 2007, 2015

20 ஓவர் உலகக்கோப்பை: 2021

சாம்பியன்ஸ் டிராபி: 2006, 2009

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 2023


Next Story