ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டி: இந்திய பெண்கள் அணி அரைஇறுதிக்கு தகுதி
மழையால் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் தரவரிசை அடிப்படையில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
ஹாங்சோவ்,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நாளை தொடங்குகிறது. இதில் கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட போட்டிகள் மட்டும் முன்னதாகவே தொடங்கி நடந்து வருகிறது.
இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ள பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கால்இறுதியில் நேரடியாக களம் இறங்கிய இந்திய அணி, மலேசியாவை நேற்று சந்தித்தது. சமீபத்தில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்ததுடன் வெளிப்படையாக விமர்சித்ததால் 2 ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஸ்மிருதி மந்தனா கேப்டன் பொறுப்பை கவனித்தார்.
மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த மலேசிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 27 ரன்னில் (16 பந்து) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 6-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை விட்டு மீண்டும் போட்டி தொடங்குகையில் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா தொடர்ந்து அதிரடியாக ஆடி வேகமாக ரன் சேர்த்தார். ஷபாலி வர்மா 67 ரன்னில் (39 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) மாஸ் எலிசா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 47 ரன்னுடனும் (29 பந்து, 6 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 21 ரன்னுடனும் (7 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின்னர் டக்வொர்த் விதிமுறைப்படி மலேசிய அணிக்கு 15 ஓவர்களில் 177 ரன்கள் வெற்றி இலக்காக மாற்றியமைக்கப்பட்டது. இதனை நோக்கி ஆடிய மலேசிய அணி 2 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி ஒரு ரன் எடுத்து இருந்த நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் ஆட்டம் கைவிடப்பட்டது. தரவரிசை முன்னிலை அடிப்படையில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
இதேபோல் பாகிஸ்தான்-இந்தோனேசியா அணிகள் மோத இருந்த கால்இறுதி ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. தரவரிசை முன்னிலை அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் இலங்கை-தாய்லாந்து (காலை 6.30 மணி), வங்காளதேசம்-ஹாங்காங் (பகல் 11.30 மணி) அணிகள் மோதுகின்றன.