ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று மோதல்


ஆசிய கோப்பை கிரிக்கெட்:  பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று மோதல்
x

இறுதிப்போட்டியை முடிவு செய்யும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இறுதி சுற்றை எட்டும் மற்றொரு அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். சூப்பர்4 சுற்றின் 5-வது லீக்கில் நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இந்தியாவுக்கு எதிராக தோற்றும், வங்காளதேசத்தை வீழ்த்தியும் தலா 2 புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. எனவே இதில் வெற்றி காணும் அணி சிக்கலின்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியது கிடையாது. அந்த அணிக்கு எதிரான கடைசி 8 ஆட்டங்களிலும் தோல்வியே மிஞ்சியது. இவ்விரு அணிகளும் இதுவரை 155 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 92-ல் பாகிஸ்தானும், 58-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. எஞ்சிய 4 ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இலங்கை: பதும் நிசாங்கா, கருணாரத்னே, குசல் மென்டிஸ், சமரவிக்ரமா, சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, ஷனகா (கேப்டன்), வெல்லாலகே, தீக்ஷனா, கசுன் ரஜிதா, பதிரானா.

பாகிஸ்தான்: முகமது ஹாரிஸ், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகில், இப்திகர் அகமது, ஷதப்கான், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம், ஜமன் கான்.

கொழும்பில் தற்போது அடிக்கடி மழை பெய்கிறது. இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும்.

39 ஆண்டுகால ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரு போதும் சந்தித்ததில்லை. இன்றைய ஆட்டத்தில் இலங்கையை பாகிஸ்தான் வீழ்த்தினால், முதல் முறையாக மகுடத்துக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story