ராகுல் அணிக்கு திரும்பினால் பிளேயிங் லெவனில் ஸ்ரேயஸை வெளியேற்றலாம் - இந்திய முன்னாள் வீரர்


ராகுல் அணிக்கு திரும்பினால் பிளேயிங் லெவனில் ஸ்ரேயஸை வெளியேற்றலாம் - இந்திய முன்னாள் வீரர்
x
தினத்தந்தி 4 Sept 2023 9:53 AM IST (Updated: 4 Sept 2023 11:18 AM IST)
t-max-icont-min-icon

ராகுலை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டுமானால் ஸ்ரேயஸ் அய்யருக்கு பதிலாக அவரை சேர்க்கலாம் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது தொடக்க போட்டியில் பாகிஸ்தானை நேற்று முன் தினம் எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களம் இறங்கும் முன்னர் மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - பாண்ட்யா இணை அணியை சரிவில் இருந்து மீட்டது.

இதில் இஷான் கிஷன் 82 ரன்னும், பாண்ட்யா 87 ரன்னும் எடுத்தனர். இந்த போட்டியில் கே.எல்.ராகுல் இடம் பெறாததால் இஷானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி கொண்டார். இனி ராகுல் அணிக்குள் வரும்போது யாரை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது,

நேபாளத்துக்கு எதிராக ஸ்ரேயஸ் எப்படி பேட்டிங் செய்கிறார் என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை அவருக்கு நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். இந்திய அணி 50 ஓவர்களும் முழுமையாக பேட்டிங் செய்தால் அவர் ஒருவேளை பேட்டிங் செய்யலாம்.

ஸ்ரேயஸ் நேபாளத்துக்கு எதிராக ரன்கள் எடுக்கவில்லை என்றால் ராகுல் மற்றும் இஷான் கிஷனை நம்பர் 4 மற்றும் 5ம் வரிசையில் ஆட வைக்கலாம். ஏனெனில் கடினமான சூழலில் 80 ரன்கள் அடித்த பின்னர் அவரை நீக்குவது நியாயமல்ல.

இஷான் கிஷனை நீக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். அது சரியும் கிடையாது. மேலும், அவர் இந்திய மிடில் ஆர்டர் வரிசையில் இடது கை பரிமாணத்தை கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story