ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் இன்று மோதல்


ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் இன்று மோதல்
x

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

வங்காளதேச அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் வங்காளதேச அணி 164 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பேட்டிங்கில் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (89 ரன்) தவிர யாரும் நிலைத்து நிற்கவில்லை. எனவே தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது நைம், தன்ஜித் ஹசன், கேப்டன் ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் எழுச்சி பெற வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஷகிப் அல்-ஹசன், தஸ்கின் அகமது போல் ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோரும் ஜொலிக்க வேண்டியது தேவையானதாகும்.

இன்றைய ஆட்டம் வங்காளதேச அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் தோல்வி கண்டால் அந்த அணியின் அடுத்த சுற்று (சூப்பர்4) வாய்ப்பு பறிபோய் விடும் என்பதால் அந்த அணியினர் எல்லா வகையிலும் வரிந்து கட்டுவார்கள்.

ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டிக்கு முன்னதாக நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தாலும், அதற்கு முன்பு நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அந்த அணியின் பேட்டிங்கில் ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், நஜ்புல்லா ஜட்ரன், ஷஸ்மத்துல்லா ஷகிடியும், பந்து வீச்சில் ரஷித் கான், பைசல்லா பரூக்கி, முஜூப் ரகுமான், நூர் அகமதுவும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். போட்டியை வெற்றியுடன் தொடங்க ஆப்கானிஸ்தான் அணி ஆர்வம் காட்டும்.

சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறுவது யார்? என்பதை கணிப்பது கடினமானதாகும். இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 8-ல் வங்காளதேசமும், 6-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story