அஸ்வின் செய்த தவறு; உடனடியாக 5 ரன்கள் பெனால்டி கொடுத்த நடுவர் - நடந்தது என்ன?


அஸ்வின் செய்த தவறு; உடனடியாக 5 ரன்கள் பெனால்டி கொடுத்த நடுவர் - நடந்தது என்ன?
x

Image Courtesy: AFP / Twitter

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

ராஜ்கோட்,

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று ராஜ்கோட் நகரில் தொடங்கியது. இந்த போட்டியில், டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்திருந்தது.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணி 331 ரன்களை எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 331 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

தற்போது எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்துள்ள அறிமுக வீரர் துருவ் ஜூரெல் மற்றும் அஸ்வின் ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து அற்புதமாக விளையாடி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 388 ரன்கள் குவித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது அஸ்வின் செய்த ஒரு தவறால் இந்திய அணிக்கு நடுவர், மைதானத்திலேயே 5 ரன்கள் பெனால்டி வழங்கினார். அதோடு இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸை ஆரம்பிக்கும் போதே 5/ 0 என்கிற போனஸ் ரன்களுடன்தான் விளையாடும் என்று நடுவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் என்னவென்றால் நேற்றைய முதல்நாள் ஆட்டத்தின்போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்தின் நடுவில் ஓடியதால் களத்தில் இருந்த நடுவர்கள் மூலம் வார்னிங் செய்யப்பட்டார். மேலும் தொடர்ந்து இதேபோல் நடக்க கூடாது என இந்திய அணியையும் நடுவர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் போட்டியின் இரண்டாம் நாளான இன்று அஸ்வின் பேட்டிங் செய்யும்போது ஆடுகளத்தின் நடுப்பகுதியில் ஓடியதால் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நடுவரிடம் புகார் அளித்தார். அதனை சோதித்த நடுவர் அஸ்வின் செய்த தவறை சுட்டிக்காட்டி அவரது இந்த செயல் ஆடுகளத்தை சேதப்படுத்தும் விதமாக அமைந்ததாக கூறி இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்களை வழங்குவதாக தனது முடிவை அறிவித்தார்.


Next Story