ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் மெதுவாக பந்துவீச்சு: சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - ஐ.சி.சி.க்கு கவாஜா கண்டனம்
ஐ.சி.சி.யின் திருத்தப்பட்ட புதிய விதிப்படி தாமதமாக பந்து வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஒரு புள்ளி கழிக்கப்படும்.
துபாய்,
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே அனல் பறந்த 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இரு அணியினரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காமல் தாமதப்படுத்தியதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கண்டறிந்துள்ளது.
இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் 5 டெஸ்டுகளில் 4-ல் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் மட்டும் 9 ஓவர்களை வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்து இருக்கிறார்கள். மொத்தத்தில் அந்த அணி 4 டெஸ்டையும் சேர்த்து 19 ஓவர்கள் தாமதமாக வீசியிருக்கிறது.
இதே போல் ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் இந்த தவறை செய்திருக்கிறது. அந்த அணி மான்செஸ்டரில் மழையால் டிராவில் முடிந்த 4-வது டெஸ்டில் மட்டும் 10 ஓவர்கள் மெதுவாக வீசியிருக்கிறது.
ஐ.சி.சி.யின் திருத்தப்பட்ட புதிய விதிப்படி தாமதமாக பந்து வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஒரு புள்ளி கழிக்கப்படும். அத்துடன் ஒரு ஓவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து அணிக்கு 5 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும்.
இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 28 புள்ளிகள் சேர்த்து இருந்தது. அதில் 19 புள்ளிகளை அபராதமாக இழந்து, இப்போது அதன் புள்ளி எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. இதே போல் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி 28-ல் இருந்து 18- ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 100 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 30 சதவீத புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 15 சதவீத புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன.
ஐ.சி.சி.யின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தனது டுவிட்டர் பக்கத்தில், 'மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்டில் இரு நாட்கள் பெய்த மழை காரணமாக 2-வது இன்னிங்சில் எங்களுக்கு பந்து வீச கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் ஐ.சி.சி., பந்துவீச்சில் தாமதம் செய்ததாக கூறி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து 10 புள்ளிகளை எங்களிடம் இருந்து பறித்துள்ளது. இது எப்படி நியாயமானது என்று தெரியவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.