இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்
4-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது.
மான்செஸ்டர்,
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 317 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி 189 ரன்னும், விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 99 ரன்னும் எடுத்தனர்.
இதனையடுத்து 275 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் முடிவில் 41 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. மார்னஸ் லபுஸ்சேன் 44 ரன்னுடனும், மிட்செல் மார்ஷ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 4-வது நாளான நேற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் சுமார் 4 மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். மிட்செல் மார்ஷ் நிதானத்தை கடைபிடிக்க மறுமுனையில் லபுஸ்சேன் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார்.
161 பந்துகளில் தனது 11-வது சதத்தை எட்டிய லபுஸ்சேன் 111 ரன்னில் (173 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) ஜோ ரூட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். 71 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்து இருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அத்துடன் நேற்றைய ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அப்போது மிட்செல் ஸ்டார்க் 31 ரன்னுடனும், கேமருன் கிரீன் 3 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இன்னும் 61 ரன்கள் பின்தங்கி இருக்கும் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது.