ஆஷஸ் டெஸ்ட்: சர்ச்சையான பேர்ஸ்டோ அவுட் - அலெக்ஸ் கேரிக்கு அஷ்வின் ஆதரவுக் குரல்...!
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுது
லண்டன்,
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையானது.
இந்தப் போட்டியில் பேர்ஸ்டோ 22 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். க்ரீன் வீசிய ஷாட் பிட்ச் பந்தை பேர்ஸ்டோ அப்படியே தன்னை கடந்து போக செய்தார். அது விக்கெட் கீப்பர் கேரியின் கைகளில் தஞ்சம் அடைவதற்குள் எதிர் திசையில் இருந்த கேப்டன் ஸ்டோக்ஸை நோக்கி நடக்க துவங்கினார்.
அவர் கிரீஸ் லைனை கடந்ததை கவனித்த கேரி, ஸ்டம்புகளை நோக்கி பந்தை வீசினார். முடிவில் அவர் ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டார். ஆனால் அவர் ரன் அவுட் செய்யப்பட்டதாக சர்ச்சை வெடித்தது.
இந்தச் சூழலில் டுவிட்டர் பயனர் ஒருவர் வெளியிட்ட பதிவில்,
கேரியின் இந்தச் செயலை போற்றுபவர்கள்தான், அஷ்வின் நான்-ஸ்ட்ரைக்கர் என்டில் கிரீஸை கடக்கும் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்தால் விமர்சிக்கிறார்கள் எனத் தெரிவித்தார். அதில் அஷ்வினையும் அந்தப் பயனர் டேக் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த அஷ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
இதன் மூலம் நாம் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பேர்ஸ்டோ செய்ததை போல சில பேட்ஸ்மேன்கள் பந்தை விட்டதும் கிரீஸை விட்டு தொடர்ந்து நகர்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
ஒரு பேட்ஸ்மேனின் இத்தகைய செயல்பாட்டை விக்கெட் கீப்பர் அல்லது பீல்டிங் செய்யும் அணியினர் கவனித்தால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வளவு தூரத்தில் இருந்து கீப்பரால் ஸ்டம்பிங் செய்ய முடியும்.
அப்படி இல்லையென்றால் அது நடக்க வாய்ப்பில்லை. இதனை நாம் சர்ச்சையாக எழுப்புவதை காட்டிலும் தனியொரு வீரரின் விளையாட்டு திறனை பாராட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.