ஆஷஸ் 3வது டெஸ்ட்; ஹாரி புரூக் அபாரம்...ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி...!
இங்கிலாந்தின் வெற்றிக்காக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் 75 ரன்கள் எடுத்தார்.
லீட்ஸ்,
உலகின் மிகவும் பிரபலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடராகும். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 26 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால், 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் சேர்த்திருந்தது.
இதையடுத்து 4ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேக் க்ராவ்லி 44 ரன், பென் டக்கட் 23 ரன், மொயீன் அலி 5 ரன், ஜோ ரூட் 21 ரன் எடுத்து ஆட்டம் இழந்தன்ர். இதையடுத்து ஹாரி புரூக், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புரூக் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஸ்டோக்ஸ் 13 ரன், பேர்ஸ்டோ 5 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். அணியின் வெற்றிக்கு 21 ரன்களே தேவைப்பட்ட போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புரூக் 75 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கிறிஸ் வோக்ஸ் உடன் மார்க் வுட் ஜோடி சேர்ந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் ஹாரி புரூக் 75 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.