ஒரு அணியாக நாங்கள் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் - ஹர்மன்பிரீத் கவுர்


ஒரு அணியாக நாங்கள் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் - ஹர்மன்பிரீத் கவுர்
x

ஷபாலி களத்தில் நிலைத்து நின்று ஆடி விட்டால் பழைய நிலைக்கு திரும்பி விடுவார் என இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியுள்ளார்.

சில்கெட்,

8-வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் வங்காளதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

தொடக்க நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்காளதேச அணி, தாய்லாந்தை சந்திக்கிறது. பகல் 1 மணிக்கு தொடங்கும் 2-வது லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்திய அணியில் தொடக்க வீராங்கனை 18 வயதான ஷபாலி வர்மா சமீபத்திய ஆட்டங்களில் திணறி வருகிறார். கடைசி 18 இருபது ஓவர் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இது குறித்து, நேற்று பேட்டி அளித்த அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவருக்கு ஆதரவாக பதில் அளித்தார்.

ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில் 'ஒரு வீராங்கனை சரியாக சோபிக்காமல் போவது விளையாட்டில் ஒரு அங்கமாகும். ஷபாலியை பார்க்கும் போது நன்றாக இருப்பது போன்று தான் தோன்றுகிறது. பயிற்சியின் போதும் சிறப்பாக செயல்படுகிறார். ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கிறார். களத்தில் நிலைத்து நின்று ஆடி விட்டால் பழைய நிலைக்கு திரும்பி விடுவார்.

எனவே அவருக்கு போட்டியில் போதிய அவகாசம் அளிப்போம். இதன் மூலம் அவர் மீண்டும் நம்பிக்கையை பெற முடியும். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக அணியில் போதிய வாய்ப்பு கிடைக்காத வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும். ஒரு அணியாக நாங்கள் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் பந்து வீச்சில் வெவ்வேறு கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்' என்றார்.


Next Story