பலாத்கார குற்றச்சாட்டில் கைது; இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா சஸ்பெண்டு


பலாத்கார குற்றச்சாட்டில் கைது; இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா சஸ்பெண்டு
x

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.



கொழும்பு,


இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா டி20 உலக கோப்பை போட்டிக்கான குழுவில் இடம் பெற்றார். இதற்காக ஆஸ்திரேலியா சென்ற அவர், போட்டி தொடரின் இடையே ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டாரா சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார். இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் அணியுடன் தொடர்ந்து பயணித்தும், வீரர்களுக்கு உதவியாகவும் இருந்தார்.

இந்நிலையில், டேட்டிங் ஆப் மூலம் 29 வயது இளம்பெண்ணை தொடர்பு கொண்ட அவர், கடந்த 2-ந்தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அவரை சந்தித்து உள்ளார். இதன்பின், குணதிலகா இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதுபற்றி பெண் அளித்த புகாரை தொடர்ந்து சிட்னி போலீசார் குணதிலகாவை கைது செய்தனர்.

இந்த வழக்கில் குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்க ஆஸ்திரேலிய உள்ளூர் கோர்ட்டு ஒன்று மறுப்பு தெரிவித்து விட்டது. இதுபற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விஷயத்தில் ஐ.சி.சி.யுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு ஒரு முழுமையான விசாரணை விரைவாக தொடங்கும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்படுகிறார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.

இதன்படி, தேசிய கிரிக்கெட் வீரர் குணதிலகா உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவதுடன், வேறு எந்த அணி தேர்வுக்கும் அவர் பரிசீலனை செய்யப்படமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை எந்தவகையிலும் சகித்து கொள்ள முடியாது என வலியுறுத்தியுள்ள வாரியம், விரைவில் விசாரணை நடத்தி முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி கூறியுள்ளது.


Next Story